சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்

ஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது? என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல் கிடைத்திருப்பதைப்போல ஐந்து கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டறிக்கையை தயார்ப்படுத்தியிருக்கின்றன.

தயவு செய்து கொஞ்சம் கவனிக்கவும். இந்த ஐந்து கட்சிகளும் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவையே. முன்னொரு காலம் – மூன்று நான்கு வருசத்துக்கு முன்பு – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒன்றாக இணைந்திருந்தவையே.

இதனால்தான் தமிழ்க்கட்சிகளின் இந்தத் தற்காலிக ஒருங்கிணைவையும் அவை முன்வைத்த கூட்டறிக்கையையும் கண்டு பரவசப்படுகின்றனர் பலரும். உடைந்து சிதறிய கூட்டமைப்பு ஏதோ ஒரு வழியில் – ஜனாதிபதித் தேர்தலை ஒரு சாட்டாக வைத்து – மறுபடியும் ஒன்று திரளாதா என்ற அங்கலாய்ப்பு இது. ஏக்கமிது.

“இது திம்புப் பேச்சுகளின்போது ஈழவிடுதலை இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டதுக்கு ஒப்பானது” என்று சொல்லிச் சந்தோசப்பட்டார் ஒரு நண்பர்.

நண்பர் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் யோசிக்கிறார்.

ஆனால் என்ன செய்வது, இலுப்பைப் பூவும் இல்லாத ஊருக்கு புளியம்பழமும் இனிப்பு அல்லவா!

இந்த ஒருங்கிணைவுக்கும் கூட்டறிக்கையின் உருவாக்கத்துக்கும்  பின்னணியாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் செயற்பட்டிருக்கின்றனர்.

பொதுவாகவே பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தேர்தல் காலத்தில் இந்த மாதிரியான அரும்பணிகளில் ஈடுபடுவது வழமை. இந்தத் தடவையும் அப்படியானதொரு பெரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தப் பணி முடிய பெரும்பாலும் அவர்களைக் காணவே முடியும் என்று சொல்வதற்கில்லை. இதற்கு முன்பும் அப்படித்தான். முன்னர் தலைமைப் பொறுப்புகளிலிருந்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அப்போது வந்திருந்த தேர்தல்களுக்கெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டனர். தலைவர்களைச் சந்தித்தனர். கருத்துகளைச் சொன்னார்கள். தேர்தல் முடிந்தபிறகு அவர்களின் அடையாளமே எங்குமில்லை.

பின்னாளில் அவர்களில் பலரும் முன்னர் (பல்கலைக்கழக காலத்தில்)  நிராகரித்த டக்ளஸ் தேவானந்தாவிடம் அல்லது விஜயகலா மகேஸ்வரனிடம் அல்லது அங்கயன் ராமநாதனிடம் சென்று தங்கள் சொந்த வாழ்வுக்கான வழியைக் கேட்டு நிற்பார்கள். கிழக்கில் அங்குள்ள அரச ஆதரவுத்தரப்புகளிடம்.

இதுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் இதுவே நடக்கும். இதைப்பற்றித் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேச வேண்டும். நிச்சயமாகப் பேசுவோம்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் மிக உன்னத நிலைப்பாடு எனத் தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தை முன்வைத்து வாதிடும் மாணவர்கள், பின்னர் தங்களுடைய சொந்த வாழ்வுப் பிரச்சினை என்று வரும்போது தமக்கான வேலை வாய்ப்பு, இடமாற்றம் என்ற (சில்லறை) விடயங்களில் கரைந்து போகிறார்கள். என்ன செய்வது? அவர்களுடைய மாபெரும்  லட்சியவாதத்தைத் தோற்கடிக்கும் கொடுமையான யதார்த்தம் அப்படித்தானுள்ளது.

இந்தமாதிரியான ஒரு சூழலில்தான் இன்றைய மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் தங்களுடைய வரலாற்றுப் பணியாக, இலங்கைத்தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனாதிபதித்தேர்தலை எதிர்கொள்ளும் முறையைப் பற்றி ஆலோசித்திருக்கின்றனர்.

இதனுடைய வெளிப்பாடாக ஐந்து கட்சிகள் உடன்பாடு கண்டு கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் உடன்பட முடியாது என்று அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) வெளியேறி விட்டது. இவர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிகளே!

எப்படியோ இந்த அறிக்கையானது, போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நிபந்தனையாகவே எழுதப்பட்டுள்ளது. அதிலும் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகியோரைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (ஆனால், இந்த அறிக்கை அப்படியே பொருந்தக் கூடியது நண்பர் சிவாஜிலிங்கத்துக்கே).

அறிக்கையில் 13 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான விடயங்கள் எதையும் இந்த வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது தெளிவு. இந்த விடயங்களுக்கு எதிரான மனப்பாங்கையும் நிலைப்பாட்டையும் இந்த மூன்று வேட்பாளர்களும் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே.

அப்படியென்றால் எதற்காக இந்த அறிக்கை? இதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வியும். இதை நாம் மூன்று விதமாகப் பார்க்க வேண்டும்.

  1. சிங்களத்தரப்பு ஏற்காத, சம்மதிக்காத கோரிக்கைகளை முன்னிறுத்துவது. அப்படி முன்னிறுத்தும்போது அது அவர்களுக்கு நேரெதிரான கூர் முனையை உருவாக்கும். அது அவர்களை மேலும் எதிர்நிலைக்கே தள்ளும். அவர்கள் அதற்குச் சம்மதிக்காத நிலையை உருவாக்கலாம். இதனை வைத்து மேலும் தமிழ் – சிங்கள முரண்பாட்டை உருவாக்குவது. பிறகு அந்த முரண்பாட்டின் வழியே சனங்களைப் பயணிக்க வைத்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொள்வது. மறுபக்கத்தில் இதைத் தமிழ்ச்சமூகத்துக்குக் காட்டி, சிங்களத்தரப்பு எப்போதும் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராகவே செயற்படுகிறது என்று காட்டித் தமக்கான இடத்தைத் தக்க வைப்பது. இது பழைய பொறிமுறைதான். ஆனாலும் இன்னும் அதையே செய்வதுதான் இதிலுள்ள கெட்டித்தனம்.

  1. ஜனாதிபதித் தேர்தலில் நாம் எதையும் செய்யாமல் இருக்கவில்லை. வேட்பாளர்களைக் கதிகலங்க வைக்கும் அளவுக்கு ஒரு எதிர்ப்பு வடிவத்தை உருவாக்கியுள்ளோம். இன்னும் நாங்கள் எங்கள் போராட்டக்குணாம்சத்தை விட்டுவிடவில்லை. அதன் அடையாளமாக – வெளிப்படாகவே இந்தக் கூட்டறிக்கையை பல கட்சிகளும் இணைந்து தயாரித்துள்ளோம் என்பது.

  1. தமிழ்பேசும் சமூகங்களின் பிரச்சினைகளைப் பற்றிய அக்கறைகள் எதையும் வெளிப்படுத்தாத விதமாக இன்றைய வேட்பாளர்கள் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது இந்தக் கூட்டமைப்பினரே. இதில் முன்னாள், இந்நாள் என்ற பேதங்கள் கிடையாது. ஆகத் தமது தவறுகளையும் இயலாமைகளையும் மறைத்து தம்மைச் சுத்தப்படுத்துவதற்கே இந்த அறிக்கை – நிபந்தனை நாடகம்.

எப்படித்தானிருந்தாலும் இதையெல்லாம் எந்த வேட்பாளர்களும் பெரிதாகக் கண்டு கொள்ளப்போவதில்லை. இருந்தாலும் இதைப்பற்றிப் பேசலாம் என்று ஒப்புக்காக இந்த வேட்பாளர்கள் சொல்லக் கூடும். அதைப்போல தமது கோரிக்கைகளையோ நிபந்தனைகளையோ இந்த வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இந்த ஐந்து கட்சியினருக்கும் நன்றாகத் தெரியும். தமிழ் மக்களுக்கும் இது நன்றாகத் தெரியும்.

ஆகவே, தேர்தல் அண்மிக்கும் வரையில் இதைக்குறித்த இழுபறிகள் நடக்க வாய்ப்புண்டு. இதை இழுபறிகள் என்று சொல்வதை விட இது ஒரு தெளிவான நாடகம் என்றே சொல்ல வேண்டும். இந்த வகையில்தான் மேற்படி மூன்று வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசுவதற்கு இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமையுமாகும்.

எல்லாம் சரி. ஆனால், இறுதியில் தமிழ்த்தரப்பின் கோரிக்கை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்த ஐந்து கட்சிகளின் கோரிக்கையை அல்லது நிபந்தனைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது? பகிஸ்கரிப்புக்கா செல்வது? அது வடக்குக் கிழக்கு முழுவதும் சரியானதா? அல்லது யாருக்கு வாக்களிப்பது? அதற்கான காரணமாக எதைச் சொல்வது? எதைக் கண்டு பிடிப்பது?

இந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒண்டும் விளங்காதவர்களைப்போல கள்ளத்தனமான பதிலளிக்கப்படுகிறது. இது தொடர்பாக கூர்மை இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் சொல்கிறார், “எல்லா வேட்பாளர்களிடமும் சர்வதேசத்திடமும் கதைத்தபிறகு இதைப்பற்றிக் கூடி முடிவெடுப்போம்” என்று.

இது என்னமாதிரியான சுத்துமாத்து….?

ஆனால் இந்தக் கோரிக்கைகள் சாதாரணத் தமிழ் மனதுக்கு சரியானதாகவே தோன்றும். எழுபது ஆண்டுகாலப்போராட்டம், அதற்குச் செலுத்தப்பட்ட விலை, அதில் ஏற்பட்ட இழப்புகள் எல்லாவற்றுக்கும் இதற்குக் குறைவான தீர்வை – அதிகாரத்தை – ஏற்பதற்குத் தமிழ் மனதுக்கு முடியாமலே இருக்கும். கூடவே தம்மை அங்கீகரிக்காமல் புறமொதுக்கிய சிங்களத்தரப்புக்கு எதிராக வைக்க வேண்டிய பொறியெனவும் அது கருதும். இதெல்லாம் நிறைவேறுகிறதோ இல்லையோ, தொடர்ந்து இதையெல்லாம் வலியுறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அது ஒரு தொடர் போராட்டத்தின் அடையாளம். தணியாத தாகம். அணையாத நெருப்பென உணர்த்துவது. உணர்வது. நம்ப வைப்பது. நம்புவது என இது விரிந்து செல்லும்.

இதை ஒத்ததே சிங்கள மனதின் நிலையும். அது தமிழ்க்கோரிக்கைகளை தமக்கு எதிரானதாகவும் அச்சமூட்டக்கூடியதாகவுமே பார்க்கிறது. ஆகவேதான் இதைக்குறித்துப் பேசுவதற்கு மேற்படி ஜனாதிபதி வேட்பாளர்களும் அவர்களுடைய கட்சிகளும் தயங்குகின்றமையாகும்.

தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள். நீதி மறுக்கப்பட்டவர்கள். சிங்களத்தரப்பினர் அவ்வாறில்லை. அவர்கள் அதிகாரத்தைக் கொண்டவர்கள். ஆட்சியாளர்கள். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள். ஆகவே இரண்டு தரப்பின் நியாயங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது. இரண்டுக்கும் ஒரே நியாயமில்லை என்று யாரும் இதைக்குறித்து விவாதிக்கக் கூடும்.

இருக்கலாம். ஒடுக்குமுறையைச் சிங்களத்தரப்பும் அது தலைமை தாங்கும் கட்சிகளும் அவற்றின் அரசாங்கமும் தொடர்ந்து அமுலாக்குகின்றன என்று அவர்கள் மேலும் இதில் வாதிடலாம். தமிழ்த்தரப்பிடம் அவ்வாறான ஒரு விடயமில்லை என்றும் அவர்கள் கூறலாம்.

ஆனால் இதையே ஒரு யதார்த்தமாக அவர்கள் (சிங்களத்தரப்பினர்) வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றனர். அதாவது சிங்களத் தரப்பு தெளிவாகவே சிலவற்றைக் கூறி விட்டது. போர்க்குற்ற விசாரணைக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு இப்படிப் பல. இதற்கு அப்பால் தாம் எந்த நிலையிலும் நகரப்போவதில்லை என்று. அதாவது அவர்கள் தங்களுடைய கழுத்திலே மரணத்துக்கான சுருக்குக் கயிற்றைப் போடுவதற்கு எப்பவாவது இடமளிப்பார்களா? அல்லது தோல்வியைச் சந்திப்பதற்கு வேலை செய்வார்களா?

ஆகவே இதை எப்படி மாற்றி, மாற்றுப் பொறிமுறையை உருவாக்கிச் சிங்களத் தரப்பை அரசியல் ரீதியாக மடக்குவது – முடக்குவது என்றே தமிழ் பேசும் தேசிய இனங்கள் சிந்திக்க வேண்டும்.

அது அப்படிக் கூறக்கூடிய அளவுக்குப் பலவீனமான அளவில் தமிழர்களின் அரசியலும் ராஜதந்திரமும் சூம்பிப்போயுள்ளன. தமிழர்கள் அரசியலை அறிவுபூர்வமாக அணுகவேயில்லை. அதனால்தான் அவர்களால் முன்னகர்ந்து செல்ல முடியாதிருக்கிறது.

இதெல்லாம் இந்த நாட்டிலே சரிவராது என்று அவர்கள் எல்லோருமே திரும்பத்திரும்பச் சொன்னாற்பிறகும் இன்னும் ஒண்டுமே விளங்காதைப்போல நடித்துச் சனங்களுக்குக் கதை விடுகிறார்கள். போதாக்குறைக்கு சர்வதேச சமூகமும் இதையே வலியுறுத்தியுள்ளது. அதற்குப் பிறகும் சனங்களுக்கு இப்படிக் கதை விடுகிறார்கள் என்றால்… இது நாடகமன்றி வேறென்ன?

சனங்களின் உளநிலையும் சாதாரணமானதல்ல. அது  சிங்களவருக்கு சும்மாவென்றாலும் வாயால பேதி கொடுப்பதற்கு ஒண்டுபட்டு நிண்டால் காணும் எண்ட புல்லரிப்போடை நிற்கிறது.

இதனுடைய பிரதிபலிப்பே இந்தக் கட்சிகளின் கூட்டறிக்கை. எப்படிச் சிங்களச் சமூகத்தின் உளவியலைக் கட்டமைப்பில் சிங்களப் பெருந்தேசியக் கட்சிகள் செயற்படுகின்றனவோ அதைப்போலவே இதுவும்.

இதனால்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் கடுமையான அடிப்படையில் தீர்மானங்கள் நிபந்தனைகளாக்கப்படுகின்றன.

அப்படி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் பின்னர் கசப்பான எதிர்விளைவுகளையே உண்டாக்கியுள்ளன. 2005, 2010, 2015 எல்லாவற்றையும் ஒரு தடவை திரும்பிப் பார்க்கலாம். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் அன்று சரியாகவே பட்டன.

பிறகு?

இதை உணர்ந்து கொள்ளாமல் மறுபடியும் மறுபடியும் சூழ்நிலைக்கேற்ப இனிக்கும் படியான தீர்மானங்களை எடுத்துச் சிலிர்ப்பதை என்னவென்று சொல்வது?

Author: theneeweb