இலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்காக, அந்தநாட்டின் அரசாங்கம் 30 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை செலவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில், க்றீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் நிக் மெக்கிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலிய செல்கின்ற ஏதிலிகளை தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த க்றிஸ்மஸ் ஏதிலிகள் முகாம், கடந்த ஏப்ரல் மாதம் மீளத் திறக்கப்பட்டது.

அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினர் நால்வர் மாத்திரமே தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அங்கு தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்காக கிறிஸ்மஸ் தீவில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் முகாமின் பராமரிப்புக்காக நாளாந்தம் 20 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவிடப்படுவதாக அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இந்த கணக்கினை ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலியாவின் பிரதி எல்லைப் பாதுகாப்பு ஆணையாளர் கைலேன் ஷக்கரோஃப், எனினும் முகாம் மீளத்திறக்கப்பட்டது அவர்களை மாத்திரம் தடுத்துவைப்பதற்காக அல்லவென விளக்கமளித்தார்.

Author: theneeweb