2019 ஜனவரி 1ல் – 60 வது ஆண்டு விழா: கியூபா புரட்சிக்கு 60 வயது

—தயான் ஜயதிலக —

ஜனவரி 1, கியூபா புரட்சியின் 60வது ஆண்டு நிறைவை குறிக்கிறது, புரட்சிகர கியூபாவின் 60 வருடங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம். கியுபா புரட்சி தூய்மையான ஒரு புரட்சி, நாங்கள் கண்ட தூய்மையான ஒரு புரட்சி அதுவாகும். தூய என்று குறிப்பிடும் போது, வெறித்தனமான, அடிப்படைவாத,புரட்சிகரத் தூய்மை என்கிற பெயரில் உள்ளக இரத்தக்களரியினால் அரசியல் களையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியை நான் அர்த்தப்படுத்தவில்லை. தூய என்ற பதத்தின் மூலம் நான் கருதுவது,கியூபாப் புரட்சி உலகிலேயே மிகவும் நெறிமுறையான புரட்சி என்பதனையே.

அந்தப் புரட்சி, புரட்சிகரமான கெரில்லா யுத்தத்தினாலும் மற்றும் நகர்ப்புற ஆயுதச் செயற்பாடுகளினாலும் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு புரட்சி, ஆனால் உணர்வுபூர்வமாகவும் மற்றும் மிகக் கவனமாகவும் பொதுமக்களை இலக்கு வைப்பதைத் தவிர்த்ததுடன் ஒரு நேரத்தில் இலக்குகளைத் தாக்கும்போது அங்கு பொதுமக்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாத வண்ணம் கவனித்துச் செயற்படுத்தப்பட்டது.

அது சிறைப்பிடிக்கப் பட்டவர்களை நடத்துவதில் மிகவும் உணர்வுபூர்வமாக கவனிக்கப்பட்ட ஒரு புரட்சி, பிடிக்கப்பட்ட படை வீரர்கள் அநேகமாக கிளர்ச்சி இராணுவத்தால் எப்போதும் விடுதலை செய்யப்பட்டார்கள். அறியப்பட்ட சித்திரவதைக்காரர்கள், கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இந்தப் புரட்சியில் கொரில்லா யுத்தத்தின்போது நீதி வழங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

பிடல் குறிப்பிட்டது போல இந்தப் புரட்சி மற்றப் புரட்சிகளைப்போல ‘தனது சொந்தக் குழந்தைகளை விழுங்கவில்லை’, புராணக்கதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது சனி தனது சொந்தக் குழந்தைகளையே விழுங்கியது என்று. அதன் மிகவும் தீவிர கட்டமான 1960ல், கியுபா புரட்சியில் அதன் தீவிரவாத நடவடிக்கை பயங்கரவாதத்தை ஏற்படுத்தவில்லை, பிரெஞ்சுப் புரட்சி உட்பட மற்ற அனைத்துப் புரட்சிகளிலும் அது நடைபெற்றது. பிரான்சின் ஜகோபின், ஏன் ரஷ்யாவின் பொல்ஷேவிக் ஆகியோரின் புரட்சிகளைப்போல மகத்தான பயங்கரவாதம் எதுவுமில்லாதது கியூபன் புரட்சி.

பிடல் கஸ்ட்ரோவைக் கொலை செய்வதற்கு வெளிநாட்டு தூண்டுதலுடன் 600 கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வேறு எந்த நாட்டிலாவது அந்த கொலைச் சதி எண்ணிக்கையில் ஒரு சிறிய அளவாவது மேற்கொள்ளப் பட்டிருக்குமானால் அதன் விளைவு மிருகத்தனமான அடக்குமுறை, சித்தப்பிரமை மற்றும் சுய தனிமை போன்றவை ஏற்பட்டிருக்கும், ஆனால் கியூபாவின் விடயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மிகவும் வெளிப்படையாக அந்தக் கொலை முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை, ஆனால் கியூபா ஒரு மூடப்பட்ட சமூகமாக மாறவும் இல்லை.

கிட்டத்தட்ட 60 வருடங்களாக, புரட்சி நடந்த ஒரு வருடம் முதல் உலகின் தனி வல்லரசினால் கியூபா பொருளாதாரத் தடை அல்லது முற்றுகைக்கு உட்பட்டு பாதிப்படைந்திருந்தது. இருந்தும் கியூபாவில் இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி முறையைக் கொண்டுள்ளது, உயர்தர மருத்துவ ஆராய்ச்சிகளின் பயனாக புற்றுநோய் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டன, உலகின் மிகவும் வறிய பகுதிகளில் கியூபன் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள், இவர்களின் கல்வியறிவை வளர்க்கும் திட்டங்கள் நியுசிலாந்தில் கூடப் பயன்படுத்தப்படுகிறது, துடிப்பான கலை, பலே நடனத்தில் வியத்தகு பயிற்சி மற்றும் இசை மற்றும் அனைத்து விதமான நடனங்கள் என்பன இங்கு உண்டு, பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக கியுபன் வீரர்கள் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நீடித்த பொருளாதார இடர்கள் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்ட போதிலும் கியூபா தனது மக்களின் நலன்புரி சேவை, நீதி, உலகம் விடுவிக்கப் படுதல் போன்றவற்றில் ஏறக்குறைய எதனையும் தியாகம் செய்யவில்லை.

கியூபா பல நாடுகளில் போர்களையும் மற்றும் யுத்ததங்களையும் நடத்திய போதிலும் மற்றும் ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் நான்கு லட்சம் துருப்புக்களை போரில் ஈடுபடுத்தியது அதில் மூன்று லட்சத்துக்கும் மேலான துருப்புக்கள் 12 வருடங்களாக அங்கோலாவில் கடமையாற்றினார்கள், யுத்தக்குற்றங்கள் அல்லது மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் கியூபாமீது சாட்டப்பட்டதில்லை, அதன் எதிரிகள், போட்டியாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள்கூட அவ்வாறு குற்றம் சொன்னதில்லை. இது எதனாலென்றால் மனிதாபிமான நெறிமுறைகளை கியூபாப் புரட்சியின் ஆரம்ப நாள் தொடக்கம் புரட்சிப் படைகள் தங்கள் சொந்த மண்ணில் பின்பற்றி வந்துள்ளன, அதே நெறிமுறைகளை அவை வெளிநாடுகளில் போரிடும்போது பயன்படுத்தின.

அதன் பெருந்தன்மை மற்றும் சுய தியாகம் என்பனவற்றுக்கு அப்பால் ஒருவேளை கியுபாவைப் பற்றி வியக்கத்தக்க மற்றொரு செயல் என்னவென்றால் அதன் உயர்வான இராஜதந்திரம் ஆகும். 1992 இலிருந்து கியுபா ஐநா பொதுச்சபையில் பொருளாதாரத் தடைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. மொஸ்கோவில் உள்ள கியூபா நாட்டுத் தூதுவர் உறுதிப்படுத்தியதன்படி நான் ஒரு நெருங்கிய சிநேகத்தைப் பேணும் சலுகையைக் கொண்டிருந்த காலஞ்சென்ற பேராசிரியர் மிகுவல் அல்போன்சோ மாட்டினஸ் அவர்கள்தான் ஐநா சபையில் 1992ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார், அது எப்போதும் ஐநா சபையில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வந்தது, வருடாவருடம் அதன் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தது. 2018ல் 189 நாடுகள் கியூபன் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்கா மற்றும் இஸ்ராயேல் ஆகிய இரு நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.

கியூபாவின் இராஜதந்திரத்தின் இரகசியம் உறுதியான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் உலகளாவிய இராஜதந்திரத்தின் இருப்பு மற்றும் பங்களிப்பு என்பனவற்றின் சேர்க்கையை சளைக்காமல், அறிவும், நிபுணத்துவமும் வாய்ந்த திறமையான தூதுவர்கள் உறுதியாகப் பின்பற்றியதே ஆகும். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலுமுள்ள அறிவுஜீவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஐக்கியத்தை விதைத்தது, மேற்கத்தைய ஊடகங்கள் மீதான திறந்த வெளிப்பாடு மற்றும் அந்த ஊடகங்களுடனான சக்தி வாய்ந்த பங்களிப்பு, மற்றும் இறுதியாக நடைமுறையில் எளிதில் தற்காக்கும் சாதனைகளின் பதிவு மற்றும் முரண்பாடான வாதம் மற்றும் மதிப்புகள் என்பனவற்றின் அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டை பின்பற்றுவது கலாச்சார ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டதல்ல ஆனால் முற்போக்கான, மனிதாபிமான மற்றும் மனிதநேயமான வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கக் கூடியவை.

கியூபா, ஸ்ரீலங்காவைவிட பெரிய ஒரு தீவு, ஆனால் அதன் மக்கள் தொகை சிறியது. அது உலக சரித்திரத்தில் ஒருபோதும் கண்டிராத பலம் வாய்ந்த இராணுவ மற்றும் பொருளாதார அதிகார சக்தியில் இருந்து 90 மைல்களுக்கு அப்பால் உள்ளது, இந்த அதிகார சக்தி -கடந்தகால ஜனாதிபதியின் இறுதிக் காலங்களில் ஏற்பட்ட சிறிய விதிவிலக்கைத் தவிர – கியூபாவுடன் ஓயாமல் விரோதம் பாராட்டும் ஒன்று. கியுபா உயிர்வாழ்வது எதனாலென்றால் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும்; வயதுவந்த ஒவ்வொரு கியூபனாலும் எதிர்க்கப்படும் என்று அதன் எதிரிக்குத் தெரிந்திருப்பதினாலும், அதனால் ஏற்படும் அதிகம் மரணங்கள்; சகிக்க முடியாதவை என்பது பொதுமக்களின் எண்ணமாக இருப்பதின் காரணத்தினாலுமே. மேலும் தெரியவருவது அத்தகைய கௌரவத்தை கியூபா அனுபவித்து வருவதுடன், லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் கிளர்ச்சி இடம்பெறுவதால் அத்தகைய உணர்வுகள் சர்வதேச ரீதியிலும் பரப்பப் பட்டுள்ளன, மற்றும்; எதிரிகள் சமூகம் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான மக்கள்; அத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பார்கள் மற்றும் அத்தகைய உணர்வுகள் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவி வருகின்றன.

ஒருவேளை உறுதியான மதிப்பீடுகள் கியூபாவின் அடிப்படை இயல்பினைக் கூட்டலாம் மற்றும் ஏன் முழு உலகமும் எழுந்து நின்று கரகோஷம் செய்யவேண்டும் என்பதை நெல்சன் மண்டேலாவின் கருத்துக்கு விட்டுவிட வேண்டும்.
“ஒரு கொடூரமான ஏகாதிபத்திய சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை எதிர்கொண்டு தங்கள் சுதந்திரத்தையும் மற்றும் இறையாண்மையையும காப்பதற்காக ;கியூபா மக்கள் செய்த தியாகத்தைக் கண்டு நாம் வியப்படைகிறோம்” என்று கஸ்ட்ரோவின் கௌரவ விருந்தினராக மண்டலா கலந்து கொண்ட ஒரு பேரணியில் அவர் தெரிவித்துள்ளார். “நாங்களும் கூட எங்கள் சொந்த விதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறோம்”…. “நீங்கள் எங்களுக்கு காண்பித்திருக்கும் மிகவும் முக்கியமான பாடம், எத்தகைய முரண்பாடுகள் எதிர்கொண்டாலும் பரவாயில்லை, எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் பரவாயில்லை அதன்கீழ் சரணடைதல் என்பதே கிடையாது”இ என்று தெரிவித்த மண்டலா மேலும் சொன்னது “அது சுதந்திரம் அல்லது மரணம் என்கிற ஒரு விடயம்” என்று. அவரது விஜயத்தின்போது மண்டலா தெரிவித்தது, “1970 மற்றும் 80 காலத்தின்போது அங்கோலாவில் தென்னாபிரிக்க படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கியூபன் இராணுவம் காட்டிய எதிர்ப்பு நிறவெறிக்கு எதிரான காரணத்தைப் பலப்படுத்தியதோடு மறைமுகமாக தனது சுதந்திரத்துக்கும் வழி காட்டியது” என்று.

“கடந்த 40 வருட காலமாக நிறவெறி ஆட்சிக்கு ஆதரவளித்தவர்கள் இப்போது கியுபாவைப் பற்றி எங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்” மிகவும் கடினமான நேரத்தில் எங்களைப்பற்றி கவலைப் படாதவர்கள் கூறும் அறிவுரைகளை கௌரவமான எந்த ஆணோ அல்லது பெண்ணோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று அவர் பிரகடனம் செய்தார். (றிச்சட் பூட்றோ, த டைம்ஸ் )

செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பின்போது தீச் சுவாலைக்கு எதிராகப் போராடி உயிர்பிழைத்த தீயணைப்பு வீரர்கள் பற்றி மைக்கேல் மூர் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார், ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட தீவிரமான வியாதிகளுக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க சுகாதரத்துறை முன்வரவில்லை. அவர்கள் கியூபாவிற்குச் சென்று அங்கு இலவசமாகச் சிகிச்சை பெற்று சொந்த நாட்டுக்குத் திரும்பியதை மூரின் திரைப்படத்தில் அவரது நிழற்படக்கருவி சாட்சியம் பகன்றுள்ளது.

விரோதமான வல்லரசில் இருந்து 90 மைல்களுக்கு அப்பால் உள்ள தூரத்தில், 60 வருடங்களாகத் தொடரும் பொருளாதார தடைகளுடன் கியுபா மாற்றீடான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பியுள்ளது, துடிப்பும்,வெளிப்படையானதும்,பெருந்தன்மை மற்றும் ஒற்றுமை என்பனவற்றைக் கொண்ட ஒரு சமூகம். உலகில் இருப்பதற்கு மற்றொரு வழியும் உள்ளது என்பதை கியூபா எடுத்துக் காட்டியுள்ளது – தேசப்பற்று மற்றும் சர்வதேசியம் மற்றும் பிரபலமும் மற்றும் உன்னதம் என்பனவற்றுடன்.

60 வருடங்களுக்கு முன்பு மலைகளில் இருந்து கியூபா முழுவதும் பயணித்து வெற்றி வீரனாக பிடல் கஸ்ட்ரோ ஹவானவை வந்தடைந்தபோது ஜனவரி 2ல் ஒரு மாபெரும் கூட்டத்தின் முன்பு உரையாற்றினார், மேலும் அவர் உரையாற்றும்போது மூன்று வெண் புறாக்கள் வானத்தில் தோன்றின, அவை பிடலைச் சுற்றி வட்டமிட்டு அவரது தோளிலும் மற்றும் அவர்முன்பிருந்த சாய்வு மேசையிலும் அமர்ந்தன. நியு மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எமிரேட்ஸ் நெல்சன் வால்ட்ஸ் 30 வருடங்களின் பின்னர் அதைப்பற்றி நினைவு கூருகிறார், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் வீழ்ச்சியடைந்துடன் மற்றும் சோவியத் ஒன்றியத்திலும் அவ்வாறு நடந்தது, அதேவேளை பிடல் அதே இடத்தில் ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் முன் உரையாற்றினார் மற்றும் நிச்சயமாக கியூபா ஒரு சோஷலிச நாடகவே இருக்கும் மற்றும் அதன் புரட்சியின் தலைவர்கள் கம்யுனிஸ்ட் ஆகவே தொடருவார்கள் எனப் பிரகடனம் செய்தார் ( புத்தம் புதிய கியூபன்அரசியலமைப்பு வரைவு அதன் ‘இலட்சிய சின்னமாக’ கம்யுனிசத்தை தழுவி அமைக்கப்பட்டுள்ளது) ஒரு வெண் புறா திரும்பவும் பிடல் உரையாற்றும் இடத்திற்கு வந்திறங்கியது! பேராசிரியர் வால்டஸ் அவதானிப்பது, இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆழமான மத நம்பிக்கையுள்ள (ஒரு ஆபிரிக்க கத்தோலிக்க ஒருங்கிணைப்பு) கியூபா மக்கள் அந்த அடையாளங்கள் என்ன என்பதை நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று. நோக்கம் உள்ளதோ அல்லது இல்லையோ கியூபன் பண்பாடு (என் மனதில் பட்டபடி), புரட்சிகர கம்யுனிசம் மற்றும் கிறீஸ்தவ அமைப்பு என்பனவற்றின் இணைப்பில் உருவான ஒரு உற்பத்தியாகும். நான் மேலும் சொல்ல விரும்புவது கிறீஸ்தவ பண்பாடு மற்றும் மதிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கிய ஒரு சமூகத்துக்கு சிறந்த உதாரணம் கியூபாவே என்று, ஒரு உண்மையான கிறீஸ்தவ சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு வாழும் உதாரணம்.

(இந்த எழுத்தாளர் “பிடலின் வன்முறையின் தத்துவங்கள்: பிடல் கஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனைகளுக்கு ஒரு தார்மீக பரிமாணம்” என்கிற நூலின் எழுத்தாளரும் கூட, புளுட்டோ அச்சகம், லண்டன் 2007, சிக்காக்கோ பல்கலைக் கழகத்தின் புத்தக அச்சகத்தினால் விநியோகிக்கப்பட்டது)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb